பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 80. நட்பாராய்தல்

அஃதாவது, நட்பிற்குத் தகுந்தவரை ஆராய்ந்தறிதல், மணவுறவு போன்று நட்புறவும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதாகையாலும், மெய்ந்நட்பால் ஆக்கமும் தீநட்பால் அழிவும் நேர்வதாலும், மலர்ந்த முகத்தையும் இனிய சொல்லையுமே சான்றாகக் கொண்டு எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்து உண்மையான அன்பரையே நண்பராகக் கொள்ளவேண்டுமென்று கூறியவாறாம். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

 

நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை-நட்பை நிலையாகக் கைக்கொள்ள விரும்பியவர்க்கும் வேண்டியவர்க்கும், ஒருவரோடு நட்புச்செய்தபின் அவரைவிட்டு விலகுதல் இயலாது; நாடாது நட்டபின் கேடு இல்லை-ஆதலால், ஆராயாது நட்புச்செய்தல் போலக் கேடுதருவது வேறொன்றும் இல்லை.

சிலர் ஒருவரோடு நட்புக்கொண்டபின், அவரை விட்டுவிலக விரும்பாமல் அல்லது துணிவில்லாமல் இருக்கலாம். சிலர் தொழிற் கூட்டுப்பற்றி ஒருவரோடு நட்புக்கொண்டு, ஒருகாலும் விலக முடியாவாறு வாழ்நாள் ஒப்பந்தஞ்செய்திருக்கலாம்: அல்லது கயவரோடு தொடர்புகொண்டு அவர் பிடிக்குள் அகப்பட்டு விலக முடியாதவராயிருக்கலாம். இவ்விருசாராரையும் நோக்கியே 'நட்டபின் வீடில்லை' என்றார். இம்மைக்குரிய பொருளின்ப விழப்பு மட்டுமன்றி, மறுமைக்குரிய அறவிழப்பும் நேருமாதலால், 'நட்டலிற் கேடில்லை' என்றார். 'நாடுதல்' குணங்களையுஞ் செயல்களையும் நேரடியாகவும் பிறர் வாயிலாகவும் ஆராய்தல். 'கேடு' ஆகுபொருளி.