பக்கம் எண் :

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு.

 

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை-உயர் குடியிற் பிறந்து தன்னைப்பற்றி உலகங்கூறும் பழிக்கு அஞ்சுபவனை; கொடுத்தும் நட்புக்கொளல் வேண்டும்-அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும்.

பல தலைமுறையாகப் பண்பட்டுவந்த குடியிற் பிறந்தவன், அக்குடிப் பண்பாட்டைக் காப்பவனாகவும் தன் குற்றத்தால் அக்குடிக்கு நேரும் பழிக்கு அஞ்சுபவனாகவும் இருப்பனாதலால் கொடுத்துங் கொளல் வேண்டும் நட்பு என்றார். நட்புத் தகுதிக்குக் குடிப்பிறப்புச் சிறந்ததென்பது இதனாற் கூறப்பட்டது.