பக்கம் எண் :

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.

 

கேட்டினும் ஓர் உறுதி உண்டு-தீமையாக எல்லாராலுங் கருதப்படும் கேட்டிலும் ஒரு நன்மை யுண்டாம்; கிளைஞரை நீட்டி அளப்பது ஒர் கோல்-அது என்னவெனின், அக்கேடேதன் நண்பரெல்லாரின் அன்பையும் நன்றாக அளந்தறிய வுதவும் ஓர் அளவுகோல் என்பதாம்.

ஆக்கக் காலத்தில் எல்லா நண்பரும் ஒரு சரியான அன்பராகத் தோன்றுவதால், அவரன்பை அளந்தறிவகை ஒன்றுமின்மையாலும்; கேட்டுக்காலத்திலேயே மெய்யன்பர் ஒட்டியும் பொய்யன்பர் விலகியும் நிற்பதால், நண்பரின் அன்பளவை அளந்தறியும் நிலைமை ஏற்படுவதாலும்; 'கேட்டினு முண்டோருறுதி' யென்றும், அதைத்தவிர வேறு அளவு கோலின்மையால் ஓர்கோல் என்றும் கூறினார்.

"காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்-ஏலா
இடரொருவ ருற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையே மென்பார் சிலர்."

(நாலடி. 113),

"தண்டுகொண் டோட்டினும் போகாமல் நம்மைத் தரிசிக்கவே
பண்டுவந் தோரின்று தாம்பூலம் வைத்துப் பரிந்தழைத்தும்
திண்டுமிண் டுஞ்சொல்லி வாரா திருந்தனர் செய்கையெல்லாம்
கண்டுகொண் டோமினித் தொண்டுகொண் டோம்நம் கடவுளுக்கே."

(வேதநாயகம்பிள்ளை தனிப்பாடல்)

என்பவை இங்குக் கவனிக்கத் தக்கன. உம்மை இழிவு சிறப்பு. 'இளைஞர்' ஆகுபொருளி. நண்பரன்பை நிலமாக வுருவகியாமையால் இது ஒருமருங் குருவகம். இம்மூன்று குறளாலும் நட்கப்படத்தக்கார் யார் யாரென்பது கூறப்பட்டது.