பக்கம் எண் :

ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

 

ஒருவற்கு ஊதியம் என்பது-ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇவிடல்- அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பைவிட்டுவிட்டு, அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம்.

அறிவிலாதார் தொடர்பு தீங்கே விளைத்தலால் ஒரிஇ என்றும்; அவர் தொடர்பை விட்டவிடத்தும் அருகிலிருந்தால், மூங்கிலைச் சார்ந்த சந்தனமரமும் வேதல்போலப் பின்னுந் தீங்குவருதலால் 'விடல்' என்றும்; அவரைவிட்டு நீங்கியபின் தீங்கொழிதலோடு இருமை யின்பத்திற்கும் வழியேற்படுதலால் அதனைப் 'பேறு' என்றும்; கூறினார். 'ஒரீஇ' இன்னிசை யளபெடை.