பக்கம் எண் :

உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.

 

உள்ளம் சிறுகுவ உள்ளற்க-தம் ஊக்கங் குறைதற்குக் கரணியமான வினைகளைச் செய்யக் கருதா திருக்க; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க-துன்பக் காலத்திற் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதிருக்க.

ஊக்கந் தளர்தற்குக் கரணியமாவன, தம் ஆற்றலுக்கு மிஞ்சிய வினைகளை மேற்கொள்ளுதலும் பயனில செய்தலுமாம். அவற்றை அறவே விடவேண்டுமென்பார் கருதலுஞ் செய்யாதிருக்க என்றார். 'ஆற்று' ஆற்றல்; முதனிலைத் தொழிலாகுபெயர். ஆற்றல் வலிமை ஆற்றறுத்தல்-வலியறுத்தல், அஃதாவது கைவிடுதல் . துன்பக் காலத்திற் கைவிடுவார் தொடர்புகொள்வதும் ஊக்கங் குறைக்கும் செயலாதலால், இங்கு உவமைக் கருத்துக்கொள்ளத் தேவையில்லை.