பக்கம் எண் :

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளுஞ் சுடும்.

 

கெடும் காலைக் கைவிடுவார் கேண்மை-ஒருவனுக்குக் கேடு நேர்ந்த காலத்து அவனை விட்டு நீங்குவார் முன்பு அவனோடு செய்த பொய்ந்நட்பு; அடும் காலை உள்ளினும் உள்ளம் சுடும்-அவன் தன்னைக்கூற்றுவன் கொல்லுங் காலத்து நினைப்பினும் அவன் உள்ளத்தைத் தீப்போற் சுடும்.

கைவிட்டார் என்னாது 'கைவிடுவார்' என்றே பொதுப்படவும் பன்மையிலும் கூறியிருத்தலால், அடுங்காலையுள்ளுதலைக் கைவிடப்பட்டவன் செயலாகக் கொண்டார் பரிமேலழகர். இது "ஒருவ னினைப்பினும்" என்னும் அவர் உரையாலும், "நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்குங் கூற்றினுங் கொடிதாமெனக் கைவீடெண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு." என்னும் அவர் சிறப்புரையாலும் அறியப்படும் சொல்லமைதிக்குப் பொருத்தமானதும், கைவிடுவார் கொடுமை மிகுதியை எடுத்துக் காட்டுவதுமான இவ்வுரை, போற்றத்தக்கதே ஆயினும், "கைவிடுவார் கேண்மை" என்பது கைவிடுதலை வழக்கமாகக்கொண்ட பலரின் நட்பைக் குறிக்குமாயின் அடுங்காலையுள்ளுதலைக் கைவிடப்பட்டவன் செயலாகக் கொள்ளுதற்கும் ஏற்குமாம். இம்மூன்று குறளாலும் நட்கப்படத் தகாத இருவகையார் யார் என்பது கூறப்பட்டது.