பக்கம் எண் :

அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.

 

அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே,

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.

என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.