பக்கம் எண் :

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

 

நட்டார் கெழுதகையால் கேளாது செயின்-பழைமையான நண்பர் தம்மைக் கேட்டுச் செய்ய வேண்டிய ஒரு வினையைத் தம் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டியிருப்பர் - அறிவுடையார் அதன் விரும்பப்படுந் தன்மை பற்றி அவரைத் தமக்கு வேண்டியவராகக் கொள்வார்.

தம் ஏவலாற் செய்யப்படுவதான ஒரு கருமத்தைத் தம் ஏவலின்றியே செவ்வையாய்ச் செய்து முடித்தாராயின், செய்தவரை "ஏவா மக்கள் மூவா மருந்து" என்று அறிவுடையார் பாராட்டுவதல்லது வேறுவகையாகக் கருதி வெறுக்கார் என்பதாம். செய்தற்குரிய செயப்படு பொருளும் வேண்டியிருத்தற்குரிய வினை முதலும் வருவிக்கப்பட்டன.