பக்கம் எண் :

பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

 

நட்டார் நோதக்க செயின் பழைமையான நண்பர் தாம் வருந்தத்தக்கவற்றைச் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க-அதற்குக் கரணியம் அவரது அறியாமை மட்டுமன்றி அவர் கொண்ட பேரூரிமையுமாகும் என்று அறிந்து பொறுத்துக்கொள்க.

நுண்ணிய நூல்பல கற்றார்க்கும் பேதைப்படுக்கும் இழவூழால் இடையிடை பேதைமை தோற்றுதலின், அதனாற் செய்யப்படும் தீச்செயலை அவர் விரும்பிச் செய்யும் பகைவினையாகக் கொள்ளற்க என்பதாம். 'ஒன்றோ' என்பது ஒன்றுதானோ என்னும் பொருளதாம்; ஆதலாற் பரிமேலழகர் கருதியவாறு எண்ணிடைச் சொல்லன்று. 'செயின்' என்பது இயல்பாற் செய்யாமையை உணர்த்திற்று. இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'நோதக்க' என்றதனால் நட்டார் தீச்செயற்கு அவரது இழவூழன்றித் தமது இழவூழும் கரணியமாகும் என்று கருதுக என்பது குறிப்பாற் பெறப்படுவதாம். பேதைமை யொன்றே போதிய கரணியமாயிருக்கவும், அதனோடு பெருங்கிழமையுங் கூடிக்கொண்டதனால், நட்டார் தீச்செயல் பற்றி அவரை எள்ளளவும் வெறுக்கற்க என்பது கருத்து.

"செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசை வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு."(நாலடி: 221)