பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 82. தீ நட்பு

அஃதாவது, பொறுக்கப்படாத குற்றமுள்ளதாயும் எப்போதும் தீமையே செய்வதாயுமுள்ள தீயோர் நட்பு. நட்பாராய்தலில் ' பேதையார் கேண்மை ' என்றும், ' அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு ' என்றும், ' கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை ' என்றும், ' ஒப்பிலார் நட்பு ' என்றும், பொதுப்படவும் சுருக்கமாகவுஞ் சொல்லிய தீநட்பைச் சிறப்பாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறவேண்டியிருத்தலின், இது பொறுக்கப்படும் குற்றமுள்ள பழமையின் பின் வைக்கப்பட்டது.

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.

 

பருகுவார் போலினும் - காதல் மிகுதியால் விழுங்கி விடுவார்போல் தோன்றினும், பண்பு இலார் கேண்மை - நற்குணமில்லார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலினுத் தேய்ந்து போதல் நல்லது.

குன்றல் - வரவரச் சுருங்கி இறுதியிற் சிறிதும் இல்லாமற் போதல், தீயார் நட்பு வளர்தலும் தேய்தலும் போன்றதே யென்பது கருத்து. உம்மை உயர்வு சிறப்பு.

பருகுவார் போலுதல் என்னும் திருக்குறள் வழக்காறு, பிற்காலத்துப் புலவரால் வழிவழி ஆளப்பட்டு வந்துள்ளது. "பருகுவன்ன காத லுள்ளமொடு" (அகம். 369) "பருகு வன்ன வேட்கை" (புறம். 207) , "பருகு வன்ன வருகா நோக்கமொடு" (பொருத. 77), பருகு வன்ன நோக்கமொடு (பெருங். 3.7: 80), பருகிய நோக்கெனும் (கம்ப. 1. 11: 37), பருகுவான் போல நோக்கும் (பாக. 4.3 : 35), "பருகுவான் போல நோக்கி" (கூர்ம. திருக்கல். 91).