பக்கம் எண் :

பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.

 

பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.

பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், ' கோடியுறும் ' என்றார். பன்மை உயர்வு பற்றி வந்தது. ஏதின்மை' இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக" என்பது நான்மணிக் கடிகை (93). கெழீஇ என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇயிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). பெருங்கெழீஇ நட்பு என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழிநட்பென்று பாடமோதுவாருமுளர்." என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்றுமிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பத னிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது." என்று கொள்ளத் தேவையில்லை.