பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 83. கூடாநட்பு

அஃதாவது, உண்மையிற் பகைவராயிருந்து தமக்கேற்றகாலம் வரும்வரை நண்பர்போல் நடிக்கும் பொய்ந்நட்பு. இது புறத்திற்கூடியிருந்தும் அகத்திற் கூடாதிருத்தலால் கூடாநட்பெனப்பட்டது. இது தீநட்பின் மற்றொரு வகையாதலால் அதன்பின் வைக்கப்பட்டது.

 

சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

 

நேரா நிரந்தவர் நட்பு-அகத்திற் கலவாது புறத்திற் கலந்தொழுகுவாரின் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை-சிறந்த சமையம் வாய்ப்பின் தாக்குவதற்குப் பட்டடை போல் உதவுவதாம்.

தக்க சமையம் வரும்வரை உதவி செய்யும் நண்பர்போல் இருந்துவிட்டு அது வந்தவுடன் தாக்குவாரின் நட்பு, அடிப்பதற்கு முன்பெல்லாம் ஒரு கனிய (உலோக)ப் பொருளைத் தாக்குவது போலிருந்து பின்பு அதை ஓங்கியுறைத்தடித்தற்கு உதவும் பட்டடை போன்றிருத்தலால், அதைப்பட்டடை யென்றே சார்த்திக் கூறினார். தீர்விடமென்று பாடமோதி முடியுமிடமென்று மணக்குடவர் உரைப்பது சரியன்று. பட்டுதல் அடித்தல். பட்டுதற்கு அடைபட்டடை.