பக்கம் எண் :

சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்.

 

வில் வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லின் வளைவாகிய வணக்கம் அதை ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தலால்; ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க - பகைவ ரிடத்துத் தோன்றும் பொய்யான பணிவுவணக்கம் தீமையன்றி நன்மை செய்தலைக் குறித்ததென்று கருதற்க.

உள்ளத்தொடு பொருந்தாமற் சொல்லொடு மட்டும் கூடிய வணக்கமாதலால், பொய் வணக்கத்தைச் 'சொல்வணக்கம்' என்றும், வில் அறிவில்லாப் பொருளும் பிறன்வினை கொண்டதுமாயினும், வளைதலுந் தீங்குசெய்தலுமாகிய வினையொப்புமையால் அதன் குறிப்பை யேதுவாக்கியும், கூறினார். வில்லியின் தீய குறிப்பு வில்வளைவின்மேல் நிற்றல்போல் பகைவரின்தீய குறிப்பும் அவர் உடல் வளைவின்மேல் நிற்றலால், அஞ்சிக் காத்துக்கொள்க என்பதாம்.