பக்கம் எண் :

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து.

 

ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல்படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும்.

கொல்லுதற்குப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம் முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும் மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' என்றார். தம் இளக்கங்காட்டி அழுதாலும் தொழுதாலும், அவர் செயலானன்றிக் குறிப்பாலேயே அவரியல்பை யறிந்து காத்துக்கொள்க வென்பதாம்.