பக்கம் எண் :

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

 

மிகச்செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாவாறு புறத்தில் அளவிறந்து நட்புச்செய்து அகத்தில் தம்மை இழிவாயெண்ணும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து - தாமும் புறத்தே நட்பாடி அவர் மகிழும் வண்ணம் செய்து; சாப்புல்லல் பாற்று - அகத்தே அந்நட்புச் சாகும் வண்ணம் பொருந்தும் பான்மையுடையது அரசியன் முறை.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்."

(குறள். 158)

என்றும்,

"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."

(குறள். 214)

என்றும், முற்கூறிய ஆசிரியரே இங்கு உள்ளொன்று புறம்பொன்றாகப் பேசி நடிப்பவரைப் பிறரும் பின்பற்ற வேண்டுமென்று கூறிய தென்னையெனின், முற்கூறியது பொதுவியலைச் சார்ந்த இல்லறத்திலுந் துறவறத்திலும் தனிப்பட்டவர் வாழ்க்கைக் குரியதென்றும், இங்குக் கூறியது நாடு முழுவதையுந் தழுவிய வேத்தியற்குரிய தென்றும், வேத்தியலிலும் பொதுவியலறத்தைக் கடைப்பிடிப்பின் உலகம் நடைபெறாதென்றும், இங்ஙனம் ஆவியியன்மையையும் (Spirtualism) பொருளியன்மையையும் (Materialism) இணைத்து நடைமுறைக்கேற்ற வாழ்க்கைச் சட்டவியல் வகுத்தவர் திருவள்ளுவரேயென்றும், அறிந்துகொள்க. சாவ என்பதன் ஈறுகெட்டது மரூஉப்புணர்ச்சித் திரிபு.

"சாவ வென்னுஞ் செயவென் னெச்சத்து
இறுதி வகரங் கெடுதலு முரித்தே."


என்பது தொல்காப்பியம் (எழுத். உயிர். 7)

"கோட்டின்வாய்ச் சாக்குத்தி" (கலித். 105)


'பாற்று' என்னும் குறிப்பு வினைமுற்று அரசியன் முறை என்னும் வினைமுதலை அவாவிநின்றது.