பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 84. பேதைமை

இனி, நட்பும் அதன் மறுதலையாகிய பகையும் அவை போன்ற குணங்களும் செயல்களும் நிலைமைகளும் பற்றிப் பன்னீரதிகாரங்களாற் கூறத்தொடங்கி, முதற்கண் தற்பகையாகிய பேதைமையைப் பற்றிக் கூறுகின்றார். பேதைமை பேதையின் தன்மை. பேதை நல்லதை விட்டுத் தீயதைத் தெரிந்துகொள்பவனும் அறிவித்தாலும் அறியாதவனுமாகிய அறிவிலி.

"பூத்தாலுங் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுந் தோன்றா துணர்வு." ( பழமொழி. 63)

 

பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்.

 

பேதைமை என்பது ஒன்று யாது எனின் - பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல் - தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல்.

கேடுதருவன வறுமை, நோய் , அறங்கடை (பாவம்) பழி, அறியாமை , பகை முதலியன. ஆக்கந் தருவன செல்வம் , உடல் நலம் , அறம் , புகழ் , அறிவு , நட்பு முதலியன. ஆகவே , பேதைமை யென்பது தானே இருமையின்பமும் புறக்கணித்தல் என்பதாம்.