பக்கம் எண் :

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

 

நாணாமை - வெட்கப்படவேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும்; நாடாமை - ஆய்ந்து பார்க்க வேண்டிய வற்றை ஆய்ந்துபாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை -பேணிக்காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம்.

வெட்கப்பட வேண்டியவை பழிகரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற்பொது.