பக்கம் எண் :

ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.

 

பேதை - பேதையானவன்; எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு - எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத்துன்பத்தை; ‘ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொருபிறப்புள்ளேயே தேடிக்கொள்ள வல்லவனாம்.

"வரும்பிறவிகளிலெல்லாந் தான்புக்கழுந்தும் நிரயத்தினை" என்றும், "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பமுழத்தற்கேதுவாங் கொடுவினைகளை" என்றும், பரிமேலழகர் கூறியிருப்பது மிக வரையிறந்திருப்பதனாலும், எழுவகைப் பிறப்பிலும் அழுந்தும் நரகென்பது உத்திக்குப் பொருந்தாமையானும், இங்கு 'எழுமைச்' சொற்குத்தொகைப் பொருளேயன்றி வகைப்பொருள் கொள்ளப்படவில்லை. 'எழுமை' நிறைவு குறித்த மரபெண்களுள் ஒன்று. அது இங்கு நீண்ட காலத்தை யுணர்த்திற்று. 'அளவு' என்னும் பெயருக்கேற்ப 'அழுந்தும்' என்றார். ஆற்றுதல் செய்ய மாட்டுதல். பேதை தனக்கு நெடுங்காலக் கேட்டைத் தானே தேடிக்கொள்வான் என்பதாம்.