பக்கம் எண் :

ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.

 

பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஒரு தொடர்பு மில்லாத அயலார் நிரம்ப வுண்ணத் தன் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கின்றிப் பசியோடிருப்பர்.

எல்லா நுகர்ச்சியும் பெறுதற்கேற்றதென்பது தோன்றப் 'பெருச்செல்வம்' என்றும், அது சொந்தத் தேட்டன்றித் தெய்வத்தால் வந்ததென்பது தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாவகையிலும் இன்பம் நுகர்தல் தோன்ற 'ஆர' என்றும், உறவினர் உணவுமின்றி வருந்துதல் தோன்றப் 'பசிப்பர்' என்றும், கூறினார். ஊரெங்கும் பேர், வீடு பட்டினி, தமக்கை கிண்ணிப் பிச்சையெடுக்கத் தம்பி கும்பகோணத்திற் கோதானம் பண்ணுகின்றான். என்னும் பழமொழிகள் இங்குக் கருதத்தக்கன. இக்குறளால், பேதை பெற்ற செல்வம் தமர்க்கன்றிப் பிறர்க்கே பயன்படுமென்பது கூறப்பட்டது.