பக்கம் எண் :

மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.

 

பேதை தன்கை ஒன்று உடைமை பெறின் - பேதையானவன் தன் கையில் ஒரு சிறந்தபொருளை உடைமையாகப் பெற்றிருந்தால்; மையல் ஒருவன் களித்த அற்று-அது ஏற்கெனவே பித்துக் கொள்ளியான ஒருவன் அதன் மேலுங் கள்ளுண்டு மயங்கினாற்போலும். 'பெறின்' எனவே,அது சொந்த தேட்டன்றித் தெய்வத்தினால் வந்தமை பெறப்பட்டது. பேதைமையும் செல்வமயக்கும் ஒருங்கேயுடையவன் பித்தமும் கள்வெறியும் ஒருங்கே கொண்டவன்போல்,தலைகால் தெரியாமல் தடுமாறிக் கெடுவன் என்பதாம். இக்குறளால் பேதை பெற்ற செல்வம் அவன் பேதைமையையே மிகுக்கு மென்பது கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.