பக்கம் எண் :

அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம்.

 

அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல்-புல்லறிவாளன் ஒருவனுக்கு ஒருபொருளை மனமகிழ்ந்து கொடுத்தல் நேரின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை--அதற்குக் கரணியம் பெறுகின்றவன் செய்த முன்னை நல்வினையே யன்றி வேறொன்றுமன்று.

புல்லறிவாளரும் ஏதேனுமொரு சமையம் பிறர்க்கு நெஞ்சாரக் கொடுத்துதவுகின்றனரே யெனின், அவ்வுதவி பெறுகின்றவர் அவ்வுதவியைத் தம்முன்னை நல்வினைப் பயனாகக் கண்டெடுத்த பொருள்போற் பெறுகின்றனரேயன்றி, அப்புல்லறிவாளர் இயல்பான ஈகைத்தன்மையாலாவது இம்மைப் புகழும் மறுமை நல்வாழ்வும் நோக்கிய அறவினையாகவாவது அவ்வுதவியைச் செய்கின்றாரல்லர் எனக்கரணியங் காட்டியவாறு. நேரின், அதற்குக் கரணியம் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன.