பக்கம் எண் :

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.

 

அறிவு இலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை-புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; செறுவார்க்கும் செய்தல் அரிது--அதைச்செய்தற்குரிய பகைவராலுஞ் செய்தற் கியலாதாம்.

இயலாமை அளவும் வகையும் கடுமையும் பற்றியதாகும். பகைவர் தம்மாலியன்ற தீங்கைமட்டும் காலமும் இடமும் அறிந்து நால்வகை வலியும் ஒப்புநோக்கித் தீர எண்ணிச் செய்வர். புல்லறிவாளரோ வறுமை, நோய், கரிசு(பாவம்), பழி முதலியன பலவகைத்துன்பங்களையும் எச்சமையத்தும் தாமே தேடிக்கொள்ளுதலின் செறுவாரக்குஞ் செய்தலரிது என்றார். உம்மை இழிவு சிறப்பு.