பக்கம் எண் :

வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

 

வெண்மை எனப்படுவது யாது எனின்-புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது,என்னது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னுஞ் செருக்கு--அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம் பட்ட ஆணவம்.

'வெண்மை' என்பது இங்கு விளையா மரம் போன்ற முதிரா அறிவு; பண்பாகுபெயர். ஒற்றுமைபற்றிக் காட்சிப் பொருளின் தன்மையாகச் சார்த்திக் கூறப்பட்டது. ஒண்மை ஒளியுடைமை;அதாவது விளங்கிய அல்லது தெளிந்த அறிவுடைமை. புறக்கண்ணிற்குப் பொருளை விளக்கும் ஒளிபோல் அகக் கண்ணிற்குப் பொருளை விளக்கும் அறிவு , புறவொளிக்கு இனமான அகவொளியாகக் கொள்ளப்பட்டது செருக்கு உண்மையொடு கூடியதும் கூடாததும் என இருவகைப்படும். ஒரு நல்லறிவாளன் தன்னை உயர்வாக மதிப்பது உண்மையொடு கூடியது ;ஒரு புல்லறிவாளன் அங்ஙனம் தன்னை மதிப்பது உண்மையொடு கூடாதது. இரண்டுங் குற்றமே. ஆயின் ,பின்னது இருமடிக் குற்றமாம்.

மேலையாரியர், சிறப்பாக அமெரிக்கர், யாம் அறிவியலைக் கண்டு வளர்த்தேமென்றும் , திங்களை யடைந்தேமென்றும், எல்லாத்துறையும் வல்லேமென்றும், தருக்கியும் செருக்கியும் வரலாற்று மொழிநூலைப் புறக்கணித்து, ஆரிய அடிப்படையில் வண்ணனை மொழி நூலை வளர்த்து வருவதும் வெண்மையின்பாற் பட்டதே.