பக்கம் எண் :

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்.

 

கல்லாத மேற்கொண்டு ஒழுகல்-புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையுங் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல்;கசடு அற வல்லதும் ஐயம் தரும்-அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை யுண்டு பண்ணும்.

'கசடு' ஐயந்திரிபு குறைவுகள். குறைவாவது , பாம்பைப் பாம்பென்றறிந்தும் உயிருள்ளதா செத்ததா என்றும் , நச்சுப்பாம்பா நற்பாம்பா என்றும், பிறவாறு நிறைவுற அறியாமை. 'ஐயம்' இவர் தேர்ச்சி பெற்றதாகச் சொல்லப்பெறும் துறையறிவும் இத்தகையதுதானோ எனக் கருதுதல். 'வல்லதூஉம்' இன்னிசையளபெடை. உம்மை இறந்தது தழுவிய எச்சம்.