பக்கம் எண் :

அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

 

அருமறை சோரும் அறிவு இலான்- பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய்காவாது வெளிவிட்டுவிடும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - தானே தனக்குப் பெருங்கேட்டை வருவித்துக் கொள்வான்.

இக்குறட்கு, 'பெருதற்கரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன், அவ்வுறுதி யறியாமையாற் றானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும்". என்று தொடருரையும் , "இனி 'இருமறை சோரு' மென்பதற்குப் பிறரெல்லாம் உள்ளத்தடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்குரைக்கு மென்றுரைத்தார்; அதுபேணாமை யென்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மை யன்மை யறிக." என்று சிறப்புரையும் வரைந்தார் பரிமேலழகர். சமய குரவன் செவியறிவுறுத்தும் மந்திரப் பொருளைப் பண்பட்ட மாணவன் பெறுதல் அறத்துப்பாலில் துறவறவியலில் 'மெய்யுணர்தல்' என்னும் அதிகாரத்திற்கு ஏற்குமேயன்றி,பொருளீட்டுதல் பற்றிய பொருட்பாலில் எவ்வதிகாரத்திற்கும் ஏற்காது. சமயத்துறையும் மெய்ப்பொருளியலும் பற்றியவுரையே சாலச்சிறந்ததென்பது,பரிமேலழகர் கடைப்பிடித்த நெறிமுறையாத் தெரிகின்றது. 833 ஆம் குறளுரையில்,"பேணவேண்டுமவை; குடிப்பிறப்பு, கல்வி ,ஒழுக்க முதலியன. "என்று அவரே உரைத்தார் . அவை வெளிப்படையாகப் பேணவேண்டிய பண்பாட்டுக் கூறுகளே யன்றி, மறைவாக மனத்துள் வைத்துக் காக்கும் மருமச் செய்திகளல்ல. ஒருகால் மறை என்பதை மறைநூற் பொருளென்று பரிமேலழகர் கொண்டார் போலும்.

"அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்."

(குறள்.1076.)

என்பதிற் குறித்தது பிறரைப் பற்றிய மறையென்றும் ,இங்குக் குறித்தது தன்னைப் பற்றிய மறையென்றும், வேறுபாடறிக.

வெளிப்படின் பதவியும் செல்வமும் உயிரும் இழத்தற்குக் கரணியமாகும் மறைவுச் செய்திகளையே 'அருமறை' என்றார். அவை சிமிசோன் தன் மதவலிக்குக் கரணியமான பிறவிச்சடை நிலைமையைத் தெலீலாள் என்னும் பொதுமகளிடம் வெளிபடுத்தியது போல்வன . 'அருமறை சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இனி, ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல் எனினுமாம். அருமறை சோர்தல் அறிந்து சோர்வதும் அறியாது சோர்வதும் என இருவகைப்படும் . சிமிசோன் அறிந்து சோர்ந்தான்.