பக்கம் எண் :

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த் திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்-தன்னிடம் முந்திவந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தினரையும் எதிர்பார்த்து அவரோடு தானுண்ணக் காத்திருப்பான்; வானத்தவர்க்கு நல்விருந்து-மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளப் படுவான்.

பண்டை வேளாண் மகளிர் தம் பிள்ளைகளை முறையாக விடுத்து வழிப்போக்கரைத் தடுத்துத் தம் வீட்டிற்கு வருவித்து விருந்தோம்பிய செய்தியை,

"உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவிர்"

என்னும் சிறுபாணாற்றுப் படைப் பகுதியால் ( 160-165)அறிக