பக்கம் எண் :

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.

 

வழிநோக்கான்-வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்தறியாதவனாகவும்; வாய்ப்பன செய்யான்- தப்பாது வாய்க்கும் வினைகளை மேற்கொள்ளாதவனாகவும்; பழிநோக்கான்-தீயன செய்யின் தனக்கு வரும் பழியைக் கருதாதவனாகவும்; பண்பு இலன்-பிறரியல்பையறிந்து அதற்கேற்ப நடக்கும் நற்குணமில்லாதவனாகவும் இருப்பவனது பகை; பற்றார்க்கு இனிது-அவன் பகைவர்க்கு இனிதாகும்.

"பண்பெனப் படுவது பாடறிந்த தொழுகல்." (கலித்.133), வெல்வது எளிதாகவும் வெற்றியால் வரும் பொருள் பெரிதாகவும் இருத்தலால் ’பற்றார்க்கினிது’ என்றார்.