பக்கம் எண் :

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

 

காணாச் சினத்தான்-செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் கேதுவான கடுஞ் சினத்தனாகவும்; கழிபெருங் காமத்தான்-கரை கடந்த பெண்ணாசையனாகவும் இருப்பவனது; பேணாமை பேணப்படும்-பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.

காணாச் சினத்தாற் கண்ணன்ன கேளிரையும் மாபெரு வலியரையும் பகைத்துக் கொள்ளுதலாலும், கழிபெருங் காமத்தாற் பெண்ணின் வாயிலாக எளிதாய்க் கொல்லப்படுதலாலும், இவ்விரு குணங்களையுமுடையான் தானே தன் அழிவைத் தேடிக் கொள்ளுதல் பற்றிப் ’பேணாமை பேணப்படும்’ என்றார். ’காணா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.