பக்கம் எண் :

கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

 

அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை-போரைத் தொடங்கி அண்மையிலிருந்து கொண்டு தனக்குத்தானே மாறானவற்றைச் செய்வான் பகையை; கொடுத்தும் மன்ற கொளல் வேண்டும்-அவன் விரும்பிய பொருளை விலையாகக்கொடுத்தாயினும் உறுதியாகப் பெறல் வேண்டும்.

அடுத்திருந்து தனக்குக் கேட்டை வருவித்துக் கொள்பவனது நாட்டைக் கைப்பற்றுதலோ, அவனிடமிருந்து பெரும்பொருள் பெறுதலோ, கூடுமாதலின், 'கொடுத்துங் கொளல் வேண்டும் மன்ற' என்றார். அப்பகை அத்துணைப் பயன்படுவ தென்பது கருத்து. 'மன்ற' தேற்றப் பொருளிடைச்சொல். "மன்றவென்கிளவி தேற்றஞ் செய்யும்." (தொல். இடை. 17). உம்மை எச்சம். மாணாத செய்தலாவன, மெலியனாயிருந்து பொருதலும் தோற்றலும் வலியனாயிருந்து பொராதிருத்தலும் பொருள்களை விட்டுவிட்டுப் பின்வாங்கிப்போதலும். இவ்வாறு குறளாலும் பகைமாட்சி வகைகளும் அவற்றின் விளைவும் கூறப்பட்டன.