பக்கம் எண் :

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து.

 

குணன் இலனாய்க் குற்றம் பல ஆயின் இனன் இலன் ஆம் - ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் அவனிடத்துள்ள குற்றங்கள் மட்டும் பலவாயிருப்பின் அவன் துணையில்லாதவனாவன்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அந்நிலைமை அவன் பகைவர்க்கு அரணாதலையுடைத்து.

இனி, 'ஆம்' என்பதனை முற்றாக்காது எச்சமாக்கி, இனனிலனாம் ஏமாப்பு என்று இயைப்பினும் ஏற்கும். 'குணம்' இறைமாட்சியுட் சொல்லப்பட்டன. 'குற்றம் இவ்வதிகாரத்துள்ளும் பிறவற்றுள்ளுஞ்' சொல்லப்பட்டன. குணம் என்னும் பொதுப்பெயர் ஆட்சியும் வழக்கும் பற்றி நற்குணத்தைக் குறித்தது. துணை சுற்றமும் நட்பும் படையுங் குடியும். ஒருவனது எளிமையும் துணையின்மையும் அவன் பகைவனுக்கு வலிமையாதலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'ஆய் என்னும் வினையெச்சம் தொக்குநின்ற உள்ள என்னும் குறிப்புப் பெயரெச்சங்கொண்டு முடிந்தது.