பக்கம் எண் :

செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.

 

அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - அரசியல் அறிவில்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்கு இன்பம் சேண் இகவா - அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றியின்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா.

ஆம்புடை யறிதலும் அறிந்தாற் செய்து முடிக்கும் மனத்திண்மையுங் ஒருங்கேயில்லாத பகைவரைப் பெறுதல் அரிதாதலின் ’பெறின்’ என்றும், அவரைச் செறுவார்க்கு வெற்றி நெருங்கி நிற்றலின் ’சேணிகவா’ என்றும் கூறினார். பரிமேலழகர் சேணின்பம் எனக்கூட்டி ’உயர்ந்த இன்பங்கள்’ எனப் பொருளுரைப்பர். அதுவும் பொருந்துவதே. ஆயின், ஆசிரியர் கருத்ததுவாயின் ’செறுவார்க்குச் சேணின்பம் நீங்கா என்று யாத்திருக்கலாம். ’அறிவிலா அஞ்சும்’ பெயரெச்ச வடுக்கு. ’இன்பம்’ பால்பகா வஃறினைப் பெயர். வெற்றி, பொருட்பேறு, வலிமிகை, பாடாண் புகழ் முதலியன பல்வேறு இன்பங்களாம்.