பக்கம் எண் :

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந் தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.

 

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று; விருந்தின் துணைத் துணை-விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.

வேட்டுச் செய்யும் வினையாகலின் விருந்தோம்பலை வேள்வி என்றார். வேட்டல் விரும்பல்.

"உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
யிறப்ப நிழற்பயந் தா அங்-கறப்பயனும்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்".

என்பது நாலடியார்(38).