பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்

அஃதாவது பகைபற்றிய பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்தறிதல். அவை பகையின் இயல்பும்., பகைக்கப்படத்தக்கவர் யாரென்பதும், பகைக்கும் நிலைமையும். பகையையும் நட்பாக்குந் திறனும். பகைவரிடத்து நடந்துகொள்ளும் முறையும், பகைகளைய வேண்டிய பருவமும் பிறவுமாம். பகைபற்றி இகலிலும் பகைமாட்சியிலுங் கூறப்படாத பல்வெறு செய்திகளைக் கூறுதலின், இது அவற்றின் பின் வைக்கப்பட்டது.

 

பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று

 

பகை என்னும் பண்பு இலதனை-பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் நகையேயும் வேண்டற் பாற்று அன்று-ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று.

இது "இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்"


என்று இகலைக் கண்டித்தது போன்று பகையைப் பொதுப்படக் கண்டித்ததாகும். அன்பு என்னும் பண்பாட்டுக் குணத்திற்கு மறுதலையாகலின் ’பண்பிலதனை’ என்றும், விளையாட்டே வினையாகவும் முடியுமாதலின் ’நகையேயும்’ என்றும், வேண்டாமை தொல்லாசிரியர் துணிபென்பார் நூலின்மேல் வைத்தும், கூறினார். ’இலதனை’ என்னும் இரண்டாம் வேற்றுமை அரசியல் நூல் என்னும் பெயரை அவாவி நின்றது. இராமன் பையற் பருவத்தில் விளையாட்டாக மந்தரை கூன்மீது மண்ணுண்டை யடித்தது, பின்பு காளைப் பருவத்தில் நாடுவிட்டுக் காடு செல்லக் கரணிய மாயிற்று என்னுங் கதை, "விளையாட்டா யிருந்தது வினையாய் முடிந்தது" என்னும் பழமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஏகாரம் பிரிநிலை. உம்மை இழிவு சிறப்பு.