பக்கம் எண் :

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கட் டங்கிற் றுலகு.

 

பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் தகைமைக்கண்-இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும் பண்பாடுள்ள அரசனது பெருமையின் கீழ்; உலகு தங்கிற்று-இவ்வுலகம் அடங்கி நிற்கும்.

பொருட்கேற்ப ’இயலுமாயின்’ என்பது வருவிக்கப்பட்டது. ’வேண்டிய வழி’ என்னுஞ் சொல்லை வருவித்தார் பரிமேலழகர். அது

’பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்.'

(குறள்.830)

என்பதிற் கூறியவாறு கூடாநட்பொடு கூடிவாழும் வலக்கார நிலைமைக்கு ஏற்குமேயன்றி, பகையை நிலையான உண்மை நட்பாக மாற்றியொழுகும் பண்பாட்டு நிலைமைக்கு ஏற்காதென அறிக.பெருமை என்றது பொருள் படை பண்பாடு முதலியவற்றால் ஏற்பட்ட தலைமை. பகையும் நட்பாக மாறியபின் உலக முழுவதும் வயப்பட்டிருக்குமாதலின் 'தகைமைக்கட் டங்கிற் றுலகு' என்றார்.தேற்றமும் நிலைபேறும் பற்றித் 'தங்கிற்று' என இறந்தகாலத்தாற் கூறினார்.