பக்கம் எண் :

தற்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.

 

தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க.

தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.