பக்கம் எண் :

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.

 

நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; பகைவரகத்து மென்மை மேவற்க - வலியின்மைபார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலிமையின்மையை மேலிட்டுக்கொள்ளற்க.

நோதல்வினை இங்கு நோதலைச் சொல்லுதலைக் குறித்தது சொல்லும் போதும் உள்ளத்தில் நோதல் தோன்றுதலின் அரசியல் வாழ்க்கையில் நட்புப் பெரும்பாலும் நிலையில்லாததும் உண்மை யற்றதுமாதலின் பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாததைச் சொல்லும்போதே நண்பரிடம் சொல்லக்கூடாததையும் உடன் கூறினார்.