பக்கம் எண் :

பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

 

விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற்கொள்ளாதார்; பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலையானதென்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால், இன்று எமக்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லையென்று நொந்து கூறாநிற்பர்.

"ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலு மாங்கே கடுந்துன்பங்-காத்தல்
குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பந் துன்பக்
குறைபதி மற்றைப் பொருள்". (நாலடியார், 280)

ஆதலால், நிலையாத பொருள் நிலையும் போதே நிலைத்த பயனைத் தேடிக்கொள்க என்பது இதனாற் கூறப்பட்டது.

வேள்வி என்னும் தூய தென்சொல்லாகிய தொழிலாகுபெயர் (ம, தெ. வேள்வி; க. பேளுவெ) விரும்பு என்று பொருள்படும் வேள் என்னும் முதனிலையடிப் பிறந்து, பின்வருமாறு, விரும்பிச் செய்யும் பல்வேறு வினைகளைக் குறிக்கும்.

1. திருமணம் "நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127).
2. விருந்தினர்க்குப் படைப்பு. வேள்வி தலைப்படாதார் (குறள். 88).
3. தெய்வத்திற்குப் படைப்பு, பூசனை ( பிங் ) வேள்வியி னழகியல் விளம்புவோரும் (பரிபா. 19 : 43).
4. பேய்கட்குப் படைப்பு, களவேள்வி, "பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின்" ( அகம். 13: 11)
5. கொடை (பிங்.).

ஆரியர் தம் ஆரியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்புதற்கும் 'யாகம்' என்னும் கொலை வேள்வியைத் தமிழரிடை எதிர்ப்பின்றிச் செய்தற்கும், தம் கொலை வேள்விக்குக் கடவுள் வேள்வி யென்றும் வேதக்கல்விக்குப் பிரம வேள்வியென்றும் பெயரிட்டு அவற்றொடு பேய்ப்படையலாகிய பூதவேள்வியையும் விருந்தோம்பலாகிய மாந்தன் வேள்வியையும் இறந்த முன்னோர்க்குப் படைத்தலாகிய தென்புலத்தார் வேள்வியையுஞ் சேர்த்து, ஐவகை வேள்வி யென்று தொகுத்துக்கூறி, வேள்வியென்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்துவிட்டனர்.