பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை

அஃதாவது, அறிவாலும் ஆற்றலாலும் பெரியாரை இகழ்ந்து தவறு செய்யாமை -அறிவாற் பெரியார் பெரும் புலவர்; ஆற்றலாற் பெரியார் பேரரையர்; இரண்டிலும் பெரியார் முற்றத் துறந்த முழு முனிவர்.புலவராற்றல் சூழ்ச்சி வலிமை யென்றும், அரையராற்றல் படைவலிமை யென்றும், முனிவராற்றல் தவவலிமை யென்றும், வேறுபாடறிக.பெரியார் பகை பிறர் பகையினும் கொடியதாதலால், அது நேராமற் காத்தல் பிறபகைகளின் பின் வைக்கப்பட்டது.

 

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம்.

'ஆற்றல்' என்பது ஆக்கத்திற்கும் அழித்தற்கும் ஏதுவான பல்வகை வலிமைகள். இகழ்ந்தவிடத்து அழித்துவிடுவார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், படை,அரண்,நட்பு முதலிய பிறகாவல்கள் அழிக்கப்பட்டு விடுமாதலின் 'தலை' என்றும், கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.