பக்கம் எண் :

எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

 

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - ஒருவன் வீடு பற்றி வேகும்போது அல்லது விளக்குத் தன்மேல் பட்டபோது தீயாற் சுடப்பட்டானாயினும், எண்ணெயாலும் மருந்தாலும் ஒருகால் சாவினின்று தப்புதல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்- ஆயின், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர் ஒருவகையாலும் தப்பார்.

தீச்சுட்ட புண் சிறிதாயிற் கேடில்லை. உடம்பு முழுதுமாயின் ஓரிரு நாளிற் சாவுண்டாம்.இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலைமையாயின் பண்டுவத்தாற் பிழைத்தலுங் கூடும்.ஆயின்,'குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி' நொடிநேரமுந் தடுக்க முடியாததாதலின், 'உய்யார்' என்றார். உம்மை உயர்வுசிறப்பு.மாதவர் சினத்திற்கு ஆளாகாது காத்துக்கொள்க என்பது கருத்து.