பக்கம் எண் :

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

 

குன்று அன்னார் - மலை போலும் மாதவர்; நிலத்து நின்ற அன்னார் குன்ற மதிப்பின் - இந்நில வுலகத்தில் அழிவின்றி நிலைபெற்றவர் போல் தோன்றும் பெருஞ்செல்வப் பேரரசர் கெடக்கருதுவராயின்; குடியொடு மாய்வர் - அவர் தம் இனத்தொடும் அழிந்து போவர்.

தட்பவெப்பத்தையும் பிறர் செய்த தீங்கையும் பொறுத்துக் கொள்ளுதலும், சூறாவளி வீசினும் பெருந்துன்பம் நேரினும் உடலுளம் அசையாமையும், ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்றலும், இம்மை மறுமை வீடென்னும் மும்மையுமு பற்றிய அறிவுப் பொருள் வளமும், ஆவிவளர்ச்சிப்பெருமையும் ,நெடுந்தொலைவுந் தோன்றுஞ் சீர்த்தியும் உடைமையால், 'குன்றன்னார்' என்றார். "மல்லன் மலையனைய மாதவரை" என்று சிந்தாமணி கூறுவதும் (முத்தி. 191)இக்கருத்தைப் பற்றியே. குன்றென்னுஞ் சொல் இங்குத்தன் சிறப்புப் பொருளைக் குறியாது மலையென்னும் பொதுப்பொருள் குறித்து நின்றது.'மதிப்பின்' என்பதற்கும் 'குடியொடு மாய்வர்' என்பதற்கும் ,முந்திய குறளில் 'செறின்' என்பதற்கும் 'வகை' மாண்ட ... என்னாம்' என்பதற்கும் உரைத்தவாறுரைக்க.