பக்கம் எண் :

ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

 

ஏந்திய கொள்கையார் சீறின் - உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர் சீற்றங்கொள்ளின்; வேந்தனும் இடை முரிந்து வேந்து கெடும்-தேவருலக அரசனும் இடையே தன் பதவியிழந்து கெடுவான்.

"வேந்தன் மேய தீம்புன லுலகமும்"


என்பது தொல்காப்பியம்(பொருள்.அகம்.5).நல்வினை செய்த இல்லறத்தாருள் பொது மக்கள் தேவராகவும் மூவேந்தரான அரசர் தேவர்க்கரசராகவும், மறுமையில் தேவருலகத்தில் தோன்றுவர் என்பதும் ,விண்ணுலக வேந்தனை நல்வினையால் வென்ற மண்ணுலக வேந்தன் மறுமையில் விண்ணுலக வேந்தனாவனென்பதும் பண்டைத் தமிழர் கொள்கை. போர்க்களத்திற் பின்வாங்காது, மறத்தொடு பொருதிறப்பதும் நல்வினை போன்றே விண்ணுலகத் தகுதியாகக் கொள்ளப்பட்டது. பிராமணர்க்கு விருந்தோம்பல் முதலிய நல்வினைத்தகுதியும் போர் செய்திறக்கும் மறவினைத் தகுதியும் இன்மையால் , வேள்விசெய்தலையே விண்ணுலக வேந்தன் தகுதியாகத் தம் தருமசாத்திரம் என்னும் அல்லற நூல்களில் வரைந்து கொண்டனர். இந்திரன் என்னும் வடசொல்லும் அரசன் என்றே பொருள் படுவதையும், தேவேந்திரன், நரேந்திரன், கவீந்திரன், மிருகேந்திரன், கசேந்திரன் எனப் பொதுச் சொல்லாயும் வழங்குவதையும், கிறித்துவிற்குமுன் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தமையும், வேந்தனும் இந்திரனும் மழைத் தெய்வமாகவே வணங்கப்பட்டமையையும் வேந்தன் விழாவே இந்திர விழாவென வடநாட்டில் வழங்கியமையையும், ஆரியர் தென்னாடு வந்தபின் அவ்வடநாட்டு வழக்கே தமிழகத்திலும் புகுத்தப்பட்டமையையும், நோக்குக. நகுடன் அகத்தியனால் வெகுளப்பட்டுத் தன் இந்திரப்பதவியை இழந்தானென்று, பரிமேலழகர் கூறியிருக்கும் ஆரியக்கட்டுக் கதை இங்கு எடுத்துக்காட்டாகாது. உம்மை உயர்வு சிறப்பு; இக்குறளால் விண்ணுலக வேந்தனும் முனிவர் வெகுளிக்குத் தப்ப முடியாமை,கூறப்பட்டது.