பக்கம் எண் :

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.

 

இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.

நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார்.

"இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319)."இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான்."


என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.