பக்கம் எண் :

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்தோ ளஞ்சு பவர்.

 

இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர்-தம் மனைவியின் பசுமூங்கில் போலும் தோளிற்கு அஞ்சுபவர் ;இமையாரின் வாழினும் பாடு இலரே-போர்மறத்தால் விண்ணுலகடைந்த தேவர்போல் இவ்வுலத்தில் வாழ்ந்தாராயினும் உயர்ந்தோராற் பாராட்டப்பெறும் பெருமையில்லாதவரே.

இமைகொட்டாதவர் இமையார், தேவர்க்குக் கண் இமைக்காதென்பது கொள்கை.

"கண்ணிமைத்த லானடிகள் காசினியிற் றோய்தலால்

அறிந்தாள் நளன்றனை யாங்கு."


என்று நளவெண்பா(153) கூறுதல் காண்க. தேவர்போல் வாழ்தலாவது ஆண்டகை யென்று அரசராலும் மதிக்கப்பட்டு வாழ்தல். பெண்ணிற் கஞ்சி அங்ஙனம் வாழ்தல் கூடாமையின், 'வாழினும்' என்பது எதிர்மறையும்மை. மூங்கில் பசுமையும் வழுவழுப்பும் உருட்சிதிரட்சியும் பற்றிப் பெண்டிர் தோளுக்கு உவமம்.முயக்கவினபம் பற்றித் தோள் சிறப்பித்துக் கூறப்பட்டது. இல்லாள் தோளிற் கஞ்சுதல் என்னுங் கூற்று,விண்ணுலகடையும் போர் மறவர் தம் பகைவரான மறவரின் தோள்வலிக்கஞ்சாமைக் கருத்தைக் குறிப்பாய் உணர்த்திற்று.'அமையார் தோள்' என்பது சிறிதும் அஞ்சத்தக்க தன்றென்னுங் குறிப்பினது.ஏகாரம் தேற்றம். 'ஆர்' உவமையுருபு.பெண்ணிற் கஞ்சும் ஆடவர்க்குப் பெருமையில்லை யென்பது கருத்து.