பக்கம் எண் :

பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.

 

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின்- நாணமின்றித் தன் மனைவிக்கு ஏவல் தொழில் செய்து வாழ்பவனின் ஆண்டன்மையைவிட ;நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து-நாணமுள்ள ஒரு பெண்ணின் பெண்டன்மையே மேன்மை யுடையது.

உறழ்ந்து கூறப்பட்ட ஆண் பெண் இருவருள் பெண்ணிற்கு 'நாணுடை' என்று அடை கொடுத்தலால், ஆணிற்கு நாணின்மை பெறப்பட்டது.நாணின்மையும் தன் ஆண்மையைக் காவாதும் இருப்பவனின் ஆண்பான்மையினும்,நாணத்தொடு கூடியும் தன் பெண்மையைக் காத்துக் கொண்டும் இருப்பவளின் பெண்பான்மை மேம்பட்டதென்பதாம்.நாணஞ் சிறந்தபெண் தன் கணவனை ஏவல் கொள்ள விரும்பாளாதலின், இங்குப் பெண் என்றது பெண்வழிச் செல்வானின் மனைவி யல்லாத பெண்ணென்று கொள்வதே சிறந்ததாம். 'ஏவல்' ஆகுபெயர்.'பெண்' ஆகுபொருளது. ஏகாரம் பிரிநிலை.ஆண்மை மறத்தொடு கூடிய ஆளுந்தன்மை; பெண்மை- விரும்பப்படுந் தன்மையொடு கூடிய அமைதித்தன்மை.