பக்கம் எண் :

அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்.

 

அறவினையும்-அறச்செயலும்; ஆன்ற பொருளும்-அதைச் செய்தற்கு வேண்டிய பொருள் முயற்சியும்;பிறவினையும்- அவ்விரண்டின் வேறான இன்ப நுகர்ச்சிகளும்; பெண் ஏவல் செய்வார்கண் இல்- தம் மனைவிக்கு அடங்கி நடப்பவரிடம் இல்லனவாம்.

பெண்ணின்பம் நோக்கி அறத்தையும் பொருளையுங் கைவிட்டவர்க்குப் பின்பு மனைவியே ஏவல் கொள்ளும் தலைவியாதலின், அவளாற் பெறக்கூடிய இன்பமும் இல்லாமற்போம் என்பதாம். முப்பொருள்களுள் அறத்தையும் பொருளையுங் கிளந்து கூறிவிட்டதனால், 'பிறவினை' என்றது இன்பவினைகளை யென்பது அறியப்படும்.புலன் ஐந்தாதலால் இன்பவினைகளும் ஐந்தாதல் பற்றிப் 'பிறவினை' யெனப் பன்மையாற் கூறினார்.

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள."

(குறள்.1101)

என்று ஆசிரியரே கூறுதல் காண்க.பெண்ணேவல் செய்வார்க்கு முப்பொருட்பேறும் இல்லையென்று இதனாற் கூறப்பட்டது.