பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 10. இனியவை கூறல்

அஃதாவது, பொதுவாக எல்லார்க்கும் சிறப்பாக விருந்தினர்க்கும், இன்முகங் காட்டியபின் இன்சொற் சொல்லுதல்.

 

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

 

இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை.