பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 92. வரைவின் மகளிர்

அஃதாவது.இல்லறம் புகாதும், கற்பைக் காவாதும், அழகு, துப்புரவு, புனைவு, முத்தமிழ்க் கலை முதலியவற்றால் ஆடவரை மயக்கி, வெளிப்படையான கொடிய நோயும் துப்புரவில்லாது தீநாற்றம் வீசும் அருவருப்பான தோற்றமு மில்லாத ஆடவர்க் கெல்லாம், குலமத பருவ நிலைமை வேறுபாடின்றித் தம் நலத்தைப் பொருட்கு விற்கும் பொது மகளிர் தொடர்பு.பலரொடும் வரையாது கூடுதலால் வரைவின் மகளிர் எனப்பட்டனர்.இத்தொடர்பும் பொருளீட்டுதற்குத் தடையாய்ப் பகைபோல்வதாலும், மணந்தமனைவிக்கு அடங்கி நடப்பதினுங் கேடு விளைத்தலாலும், பெண்வழிச் சேறலின் பின்வைக்கப்பட்டது.

 

அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா
ரின்சொல்லிழுக்குத் தரும்.

 

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்- ஒருவனை அன்புபற்றி விரும்பாமற் பொருள் பற்றி விரும்பும் அழகிய வளையலணிந்த விலைமகளிர்; இன்சொல்- தாம் கருதிய பொருள் பெறுமட்டும் தாம் அன்பு கனிந்தவராகக் கூறும் இனிய சொல்; இழுக்குத் தரும்-அன்று இன்பந்தருவதுபோல் தோன்றினும் பின்பு துன்பத்தையே விளைவிக்கும்.

'ஆய்தொடி' , 'இன்சொல்' என்பன ஆடவருள்ளத்தைக் கவரும் கருவிகளுள் இரண்டைக் குறித்தன.'பொருள்விழையும்' ஐந்தாம் வேற்றுமைத்தொகை.ஆய்தொடி ஆராய்ந்தெடுத்ததொடி; வினைத்தொகை.