பக்கம் எண் :

பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்.

 

அருட்பொருள் ஆயும் அறிவினவர்- அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் அறிவினையுடையார்; பொருட்பொருளார் புல் நலம் தோயார்-அறத்தையும் இன்பத்தையும் நோக்காது பொருளையே பொருளாகக் கொண்ட விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற்படியார்.

காட்சியுங் கருத்துமாகிய எல்லாப்பொருள் கட்கும் பொருள் என்பது பொதுப்பெயராதலின், 'பொருட் பொருள்' என இருபெயரொட்டாக்கினார். புன்மை தன்மையிலும் அளவிலுஞ் சிறுமை. தோய்தல் தொடுதல் அல்லது படிதல். "தாடோய் தடக்கை"(புறம்.14), கானிலந் தோயாக் கடவுளை (நாலடி. கடவுள் வாழ்த்து) என்பன காண்க. முழுகுதல் என்னும் பொருளும் உள்ளதேனும், அது இங்கு ஆழ்ந்து ஈடுபடுதலைக் குறிக்குமாதலின் விலக்கப்பட்டது. அறவழியில் ஈட்டும் பொருளை 'அருட்பொருள்' என்றும், அதற்குத் தடையாயிருத்தலால் 'புன்னலந்தோயார்' என்றும், கூறினார்.