பக்கம் எண் :

இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் -இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாம்.

பொருள்மேல் விருப்பும் ஆள்மேல் விருப்பின்மையுமாக உடம்பாற் கூடுதலும் உள்ளத்தாற் கூடாமையும் ஒருங்கே யுடையார் மனத்தை 'இருமனம்' என்றார். வரைவின் மகளிர்போன்றே கள்ளுஞ் சூதும் பொருட் பகையாதலின் , உடன் கூறப்பட்டன.இதனால் அடுத்துவரும் ஈரதிகாரங்கட்கும் தோற்றுவாய் செய்யப்பட்டது.

"பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப் பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே."

(தொல்.534)

என்றவாறு, இங்கு இருதுணையும் விரவிவந்த எழுவாய்கள் 'தொடர்பு' என்னும் அஃறிணை முடிபு கொண்டன.'திரு' ஆகுபெயர். மூவகையுறவுகளுள் ஏதேனுமொன்றிருப்பினும் , புதிதாகப் பொருள் சேராமையோடு இருந்த பொருளும் போய்விடும் என்பதாம். இந்நான்கு குறளாலும் விலைமகளிரொடு கூடுவோர் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.