பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 93. கள்ளுண்ணாமை

அஃதாவது, நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ இருந்து வெறியினால் உணர்வை மறைக்கும் பொருட்களையுண்ணாமை. கள்ளுதல் மறைத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. கள்-கள்ளம் = மறைப்பு. கள் - களவு= மறைப்பு.

கள் என்னும் பெயர் முந்நிலைப் பொருட்கும் பொதுவேனும், பெருவழக்குப் பற்றி நீர்வடிவான பொருளையே குறிக்கும். அது இயற்கையுஞ் செயற்கையும் என இருவகைத்து; முன்னது பனை தென்னை முதலிய மரங்களின்று இறக்குவது; பின்னது அரிசி காய்கனி முதலியவற்றைப் புளிக்க வைத்தும் காய்ச்சியும் எடுப்பது.

விலைமகளிர் கூட்டம் போன்ற கட்குடியும் பொருளீட்டற்குத் தடையாயும் விளைவளவிற் பகை போன்றும் இருத்தலால், விலக்கப்பட்டு வரைவின் மகளிரின் பின் வைக்கப்பட்டது.

 

உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.

 

கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு நடப்பவர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்- அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர்.

பேரரசராயினும் கள்ளுண்டு வெறித்த விடத்துச் சிறு பிள்ளையாலும் எளிதாய்க்கொல்லப் படுவராதலாலும், அந்நிலைமையடையுமாறு எவ்வேளையிலும் உட்பகைவராற் கள்ளூட்டப்படுவராதலாலும், எஞ்ஞான்றும் 'உட்கப்படார்' என்றும், ஒழுக்கக்கேடும் மானக்கேடும் பற்றி இகழப்படுவராதலால் 'ஒளியிழப்பர்' என்றும் கூறினார். 'படாஅர்' இசைநிறையளபெடை.